வாழ்க்கைக் குறிப்பு:

ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும். கவிஞர் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் - தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவதாக வந்து பிறந்தார்.

காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றவர், தொடர்ந்து ஊர்காவற்றுறைப் புனித அந்தோனியார் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும், கொழும்பு அக்குவேனஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் பல்கலைக் கழகக் கல்வியையும் கற்று இளமாணிப் (பீ. ஏ.) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

1976 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் துறையில் பயிற்சி பெறுவதற்காக, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இரு வருடங்கள் பயின்று நாடகத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றதுடன், கல்வியியல் துறையிலும் டிப்ளோமாப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். இத்தகைய தகைமைகளைப் பெற்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்த இவர், அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மறைந்த திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வேண்டுதலின் பேரில் தனது ஊர்ப் பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார்.

அதிபர் பணி தொடரும் வேளை பதவி உயர்வின் நிமித்தம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு விரிவுரையாளராகவும், தொடர்ந்து தலவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சென்று அக்கலாசாலையின் அதிபரானார். மீண்டும் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து, 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்வரை அங்கு அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பகுதியிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நெறியாள்கையின் கீழ் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். ஓய்வுபெற்ற பின்னரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வியியல், உளவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். கலாசாலையில் கடமையாற்றும் போதே திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உளவியலையும், யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலையும், யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்துநாகரிகத்தையும் போதிக்கும் இடைவரவு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

பிற்காலப்பகுதியில் இந்தியாவிற்கு செல்லும் வேளைகளில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை அமெரிக்கன் மிஷன் கல்லூரி, பாளையங்கோட்டை சென். சேவியர் கல்லூரி ஆகியவற்றில் கருத்தரங்குகளை மேற்கொண்டதுடன் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அவற்றின் பயனாகவே இவரது இறுதி நூலான ‘ஈழத்து மலையகக் கூத்துக்கள்’ எனும் நூல் வெளிவந்தது. அதுமட்டுமன்றி ஜேர்மனி நாட்டிற்குச் சென்று, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட 'வளர்நிலை' எனும் தமிழ்கல்வி நூலின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

வாழ்வு முழுமையும் கற்றலையும் தேடலையும் தன் வசப்படுத்திக் கொண்டதனால் தன்னையொரு மாணவனாக அடையாளப்படுத்தி வாழ்ந்தார். அதனால் எத்துறையிலும் கற்பிக்கும் ஆற்றலையும் பேசும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். தமிழ் மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் சந்தேகம் என்றால் அதற்குரிய நூலைத் தேடி எடுத்து வாசிக்கும் மட்டும் ஓய மாட்டார். பண்டிதர் வித்துவான் க. கி. நடராஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ. பொன்னுத்துரை, தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார், ஆ. சபாரத்தினம் ஆகியோர் கற்பித்த தமிழ் பற்றி எப்போதும் பெருமை கொள்வார். எஸ். செல்லத்துரை, ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை, அன்ரன் யேசுதாசன், எம். எம். துரைசிங்கம் ஆகிய ஆசிரியர்களிடம் ஆங்கில இலக்கியமும் கற்றிருந்தார். கே. நாகரத்தினம், பிரம்மஸ்ரீ சீதாராமசாஸ்திரிகள், சீ. சீ. எஸ். ஆனந்தகுருகே ஆகியோரிடம் முறையாக சமஸ்கிருதம் கற்றதனால் உச்சரிப்புப் பிழையின்றி சுலோகங்களைச் சொல்லுகின்ற ஆற்றல் அவருக்குச் சாதகமாயிற்று. சண்டிலிப்பாய் நாகரத்தினம் ஆசிரியரிடம் பாளி மொழியையும் வண. மகாநாம தேரரிடம் சிங்கள மொழியையும் கற்றிருந்தார்.

தமிழ் மொழி மீதும் சைவ மதம் மீதும் மிகுந்த பற்றுடன் வாழ்ந்த இவர், 1968 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டுக்குத் தமிழ்நாடு சென்று வந்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போக முற்பட்டவேளை, அங்கு ஈழத்தமிழர் புறக்கணிக்கப்படுவது கேள்வியுற்றுத் தன்பயணத்தை நிறுத்திக்கொண்டார். தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பேச்சாளாராகத் திகழ்ந்த இவர் சிங்கள ஸ்ரீ அழிப்பில் பங்குபற்றிச் சிறைக்கும் சென்றவர். ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கில் “கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” எனக் கூற, இளைஞர் அணியொன்று தம் ஆதரவைக் கோசங்களாக்கி மேடை நோக்கி வந்தமை உணர்வுபூர்வ சம்பவமாகும். ஆனாலும் மொழி, மதம் இரண்டையும் நேசித்த போதும் அவற்றினை வெறியாகக் கொண்டவரில்லை; மனிதமே இவரது தலையாய பண்பு.

தமிழரசுக் கட்சி உறுப்பினரான இவர் அக்கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றுவரும் போது வட அல்வை க. முருகேசு ஆசிரியருடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தமையால் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தன் ஏக புதல்வி இந்திராவதியை 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். இத்தம்பதியர், இல்லற வாழ்வில் கௌசல்யா, மாதவி, பூங்குன்றன், திருப்பரங்குன்றன் ஆகிய நான்கு பிள்ளைகளைப் பேறாகப் பெற்றனர்.

ஆரம்ப காலங்களில் இவரது கவியாற்றல் கண்டு கனக செந்திநாதன் மேடைகளில் கவிபாடச் சந்தர்ப்பங்கள் அளித்திருந்தார். தொடர்ந்து அ. செ. முருகானந்தன், மதுரகவி நாகராசன் ஆகியோர் ஊக்குவித்தனர். அன்று வடஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் இவர் தம் கவிதைகள் அரங்கேறின. கவிதைகளைப் பண்டிதர் முதல் பாமரர் வரை ரசித்துக் கேட்கும் கவியரங்க மேடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இவரை ஈழத்து இலக்கியக்காரர் கூறுகின்றனர். நகைச்சுவையுணர்வுடைய இவர், பட்டிமன்ற மேடைகள், சமயச் சொற்பொழிவுகள், ஆய்வரங்குகள் போன்றவற்றிலும் பாராட்டுப்பெறும் பேச்சாளராக விளங்கினார். அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்களில் பிரபல்யமான இந்துநாகரிக ஆசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.

நாடக ஆய்வாளனாக தன்னை இவர் இனங்காட்டிக்கொள்வதற்கு குடும்பச் சூழலும், இயல்பாக அமைந்த நடிப்பாற்றலும் காரணமாகின. இரணிய சம்ஹாரம் (நாட்டுக்கூத்து), Merchant of Venice (ஆங்கில நாடகம்), பராசக்தி (சமூகநாடகம்) என்பவற்றில் நடித்தும் இருக்கின்றார். பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடிப்புப் பயிற்சியைப் பெற்றதுடன், பெரிய தகப்பன் அண்ணாவியார் ஆண்டிஐயா, ஆசிரியர் ஆ. முருகேசு, நடிகமணி வி. வி. வைரமுத்து ஆகியோருடன் நெருங்கிப் பழகி ஆட்ட நுணுக்கங்களையும், இசை நுணுக்கங்களையும் கற்றிருந்தார். ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றபோது தனக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திய பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி இருவரிடத்திலும் வாழ்நாள் முழுதும் அன்பும், மதிப்பும், நன்றியும் கொண்டவராக இருந்தார்.

இவரினால் பின்வரும் நாடகங்கள் இயக்கப்பட்டிருந்தன. அவையாவன, சமூகநாடகங்களாவன: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே. இதிகாச புராண நாடகங்களாவன: பக்தநந்தனார், கர்ணன், சகுந்தலை, தமயந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல். ஆட்டநாட்டுக்கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், முத்தா மாணிக்கமா, காமன்கூத்து. சிறுவர் நாடகங்களாவன: மூத்தோர்சொல் வார்த்தையமுதம், பாவம் நரியார்.

விருதுகள் தான் கலைஞனை வாழவைக்கும் என்பதில்லை. ஆனால் கிடைத்த விருதுகள் பதிவிற்குள்ளாவது காலத்தின் தேவையாகும். அவ்வகையில் இவர் பெற்ற பரிசில்கள் பின்வருமாறு:

பதுளை பாரதிகல்லூரி 1968 இல் நடத்திய அகில இலங்கை ரீதியான கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தங்கப்பதக்கம்.

யாழ் மாநகரசபை 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.

அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசாகத் தங்கப்பதக்கம்.

‘சுதந்திரன்’ நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.

தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு.

யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்றக் கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும், விருதும்.

ஈழநாடு தினசரிப் பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் ‘சங்கிலியம்’ முதற்பரிசு.

யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக் கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது.

இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:

தேனாறு (1968), சங்கிலியம் (1970), ஈழத்து இசைநாடக வரலாறு (1990), இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).

வடக்குக் கிழக்கு மாகாண, சாகித்தியமண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:

இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் 2000ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின்போது ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண மாநகரசபையின் மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டு அன்றைய மேயராகவிருந்த இராசா. விஸ்வநாதன் அவர்களால் பொன்னாடையும் போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். யாழ். மாநகர மன்றுக்கான கீதம் திறந்த போட்டியாக இடம்பெற்றுத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தவிர யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும், யாழ்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டவை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

இவரது ஆக்கமுயற்சிகள் எப்போதும் பெறுமதிமிக்கவையே. அவையாவன:

1.   தேனாறு (1968)
2.   சங்கிலியம் (1970)
3.   தவம் (1971)
4.   ஈழத்து இசைநாடக வரலாறு (1990)
5.   பாதைமாறியபோது (1986)
6.   காவேரி (1993)
7.   இந்து நாகரிகத்திற் கலை (1994)
9.   வி.வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996)
10.  சிங்களப் பாரம்பரிய அரங்கம் (1997)
11.  பூதத்தம்பி இசை நாடகம் (2000)
12.  வட இலங்கை நாட்டார் அரங்கு (2000)
13.  விவேக சிந்தாமணி - உரைநடை
14.  நாடகதீபம் - தொகுத்தது
15.  உளவியல் - பதிப்பித்தது
16.  கல்வியியல் - பதிப்பித்தது
17.  புள்ளிவிபரவியல் - பதிப்பித்தது
18.  ஈழத்து மலையகக் கூத்துக்கள்

இவர் தன் இல்லற வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் ‘எறித்த முழுநிலா’ ஆகத் தான் இருந்தார். ஏற்றத்தாழ்வுகள் பார்த்து யாரோடும் உறவு கொண்டாடியதில்லை. எந்த இடத்திலும் தன் ஆளுமையை அடையாளப்படுத்தியபடியே வாழ்ந்தார். சிறியனவற்றைச் சிந்திக்காமையே இவரது பலம்; உயர்ந்த சிந்தனைகளும், மென்மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வ மிகுதியுமே எப்பொழுதும் காணப்பட்ட விடயங்கள். அவரது முயற்சியே அவரது வளர்ச்சி, தனது உயர்வுகளுக்கு எவரது உதவியையும் நல்கியவரல்ல.

உயர் பண்புள்ள நண்பர்களும், உறவுகளும் மாணாக்கர்களும் இவருடன் இரண்டறக் கலந்திருந்தமை என்றும் பலர் வியக்கும் விடயங்கள். அனைத்து வரங்களையும் பெற்ற பூரண மனிதனாக வாழ்ந்த காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் 2005ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்தோராம் நாள் தனது அறுபத்தேழாவது வயதில் இலண்டனில் காலமானார்.

    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு
      (அதிகாரம்: நட்பு குறள் எண்:783)